வடிவேலு படத்தில் ‘கிணற்றைக் காணவில்லை’ என்பது போல பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 60 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தைக் காணவில்லை. இரயில் பெட்டிகளில், பாத்ரூமில் இருக்கும் இரும்புக் குவளைகள் காணாமல் போகும்; சாலையில் உள்ள கழிநீர்க் குழாய்களின் மூடிகள் தொலைந்து போகும்; அரசு அலுவலகங்களில் உள்ள ‘ஸ்க்ராப் மெடீரியல்’ தொலைந்து போகும். ஆனால் இங்கே ஒரு பாலமே காணமல் போயிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அரசு அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட ஒரு கும்பல், இந்தப் பாலத்தைப் பிரித்து திருடியுள்ளார்கள். இது மொகலாயப் பேரரசரான ஹுமாயூனை வென்ற ஷெர்ஷா சூரியின் புகழ்பெற்ற அற்புதமான கல்லறைக்கு அருகில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.
பாலம் சுமார் 500 டன் எடை கொண்டது. இது 1972 ஆம் ஆண்டு நஸ்ரிகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள ‘அமியவார்’ கிராமத்தில் உள்ள ‘அர்ரா’ கால்வாயின் மீது கட்டப்பட்டது. ஏப்ரல் 2ஆம் தேதி, நீர்ப்பாசனத் துறையின் அதிகாரிகளாகக் காட்டிக் கொண்ட ஒரு குழுவினர், அடுத்த மூன்று நாட்களில் எரிவாயு கட்டர்கள் மற்றும் மண் அள்ளும் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் பயன்பாட்டில் இல்லாத பாலத்தை அகற்றினர்.
2014ஆம் ஆண்டில், 15,000 மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தை ‘ஆதர்ஷ் கிராமம்’ (சிறந்த கிராமம்) என்று அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா அறிவித்தார். கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கான்கிரீட் கட்டமைப்புகள் உள்ளன. அமியாவாருக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. “கிராமத்தில் எங்களுக்கு தினசரி அடிப்படையில் தேவையான அனைத்தும் உள்ளன, ஆனால் இந்த திருடப்பட்ட பாலம் சம்பவம் உண்மையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் அக்கிராமத்தில் வசிக்கும் ஏ. ஜிதேந்திர சிங்.
பாலத்தைப் பிரித்து எடுத்துச் செல்லும்போது கிராம மக்கள் பார்த்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை உள்ளூர்வாசிகள் உணர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததற்குள், அவர்கள் அதுவரை அகற்றிய இரும்புக் குப்பைகளுடன் தப்பி ஓடிவிட்டனர் என்று நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சுபாஷ் குமார் தெரிவித்தார்.
“அந்தத் திருடர்கள் மீது கிராம மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. பாலம் பலவீனமாகவும், பழமையானதாகவும் உள்ளதால், அதை இடிக்குமாறு அரசுக்கு அவர்கள் மனுச் செய்திருந்தனர். இந்தப் பாலம் சில காலத்திற்கு முன்பு ஆபத்தானதாக அறிவிக்கப்பட்டது. பழைய பாலத்தை ஒட்டி ஒரு புதிய கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது, அது தற்போது உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது” என்று அமியவார் கிராமத்தில் வசிக்கும் மந்து சிங் கூறினார். ஜேசிபி மற்றும் பிற அகற்றும் கருவிகள் வருவதைக் கண்டு, பாலத்தை கழற்றி எடுத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் என அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பக்கத்து கிராமத்து நண்பர், வந்திருப்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்ல என்று சொல்லும் வரை அந்த கிராமத்தினருக்கு அது தெரியவே இல்லை.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பழைய இரும்பு வியாபாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். நீர்ப்பாசனத் துறையில் பணிபுரியும் ஒரு தற்காலிக அதிகாரியின் உதவியுடன் முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
To read reviews
Comments